பதிவு செய்த நாள்
26
பிப்
2019
12:02
ஸ்ரீபெரும்புதுார்: டெண்டர் விட்டு, எட்டு மாதம் கடந்த நிலையிலும், ஸ்ரீபெரும்புதுாரில், தேர் கூண்டு அமைக்கும் பணிகள் துவங்கவில்லை.
ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் ராமானுஜர் அவதார விழா மற்றும் ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழாவில், தேர் பவனி நடைபெறும். இந்நிலையில், 2017ம் ஆண்டு, சாலை விரிவாக்க பணிக்காக தேர் கூண்டு அகற்றப்பட்டது. பின், இந்நாள் வரை அது மீண்டும் அமைக்கப்படவே இல்லை. இதனால், பழமையான தேர், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகிறது.
ஹிந்து அறநிலைய துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் கூண்டு அமைக்க, கடந்த ஆண்டு ஜூலையில், டெண்டர் விடப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்காததால் தேர் கூண்டு அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. தற்போது தேர் மீது போடப்பட்டுள்ள பாலித்தீன் கவரால் தேருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, கிடப்பில் உள்ள தேர் கூண்டு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.