பதிவு செய்த நாள்
01
மார்
2019
12:03
காஞ்சிபுரம்: புராதன நகர மேம்பாடு மற்றும் புனரமைப்பு திட்டத்தில், காஞ்சிபுரம்
ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வெளியே, ஏழு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது.
மத்திய அரசு, 2014ல், காஞ்சிபுரத்தை, பாரம்பரிய நகரமாக அறிவித்தது. புராதன நகர மேம்பாடு மற்றும் புனரமைப்பு திட்டத்தில், 23.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்தின் கீழ், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சியம்மன் கோவில் சுற்றுப்பகுதிகளில் மழைநீர், மின்சாரம், தொலைபேசி கேபிளுக்கு என, தனித்தனி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டு, கிரானைட் கற்கள் பதிக்கப்படுகின்றன.பயணியர் உடைமைகள் பாதுகாப்பு அறை, நவீன கழிப்பறை, கோவில் கோபுரங்களை மறைக்கும் அளவிற்கு, வெளியே தெரிந்த தெருவிளக்கு மற்றும் வீட்டு மின் ஒயர்கள், பூமிக்கடியில் பதிக்கும் பணி உட்பட பல பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வெளியே, சிசிடிவி எனப்படும், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடக்கிறது.இது குறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் இரண்டு கேமராக்களும், பக்தர்கள் உடைமைகள் பாதுகாப்பு அறையில் ஒன்றும், 16 கால் மண்டபத்தில், நான்கு என, ஏழு கேமராகக்கள் பொருத்தப்பட உள்ளன.இக்கேமரா பதிவுகள் மற்றும் கண்காணிப்புகளை, நகராட்சி நிர்வாகம் பராமரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.