பதிவு செய்த நாள்
01
மார்
2012
11:03
சேந்தமங்கலம்: நைனாமலை வரதராஜ பெருமாள், சோமேஸ்வரர் கோவிலில், மாசிமக திருத்தேர் பெருவிழா, மார்ச் 7ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. சேந்தமங்கலம் அடுத்த நைனாமலையில், பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள், சோமேஸ்வரர் வகையறா திருக்கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மாசிமக திருத்தேர் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, மார்ச் 7ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கடந்த 27ம் தேதி இரவு கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8.45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, அபிஷேகம், ஆராதனை, இரவு ஹம்ச மற்றும் சிம்ம வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு ஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கரகாட்டம், காளி, சிவன், நடனம் மற்றும் சிலம்பு விளையாட்டும் நடந்தது. அதை தொடர்ந்து, மார்ச் 6ம் தேதி வரை தினமும் காலை10 மணிக்கு அபிஷேகம், ஆராதனையும், இரவு 7 மணிக்கு அனுமந்த, கருடன், ரிஷபம், யானை, புஷ்பம், குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். மார்ச் 7ம் தேதி அதிகாலை 5 மணிக்கு, வரதராஜ பெருமாள், சோமேஸ்வரர் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பெரிய தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 8ம் தேதி பெரிய தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 9 காலை 9 மணிக்கு, சோமேஸ்வரர் தேர் வடம் பிடித்தல், இரவு சத்தாபரணம், கற்பக விநாஷகம் கைலாச வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 10ம் தேதி காலை அபிஷேகம், இரவு வசந்த உற்சவம், வெள்ளி பல்லக்கில் ராஜமோஷ சேவைப்புறப்பாடும், மார்ச் 11ம் தேதி காலை அபிஷேகம், இரவு விடையாத்தி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் வரதராஜன், செயல் அலுவலர் சிவப்பிரகாசம், கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.