பதிவு செய்த நாள்
01
மார்
2012
11:03
பாலக்கோடு: பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோவில் 19ம் ஆண்டு திருவிழா கடந்த 27ம் தேதி அம்மனுக்கு கொலு வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மாலையில் நையாண்டி கரகம், காவடியாட்டம் நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், மாவிளக்கு ஊர்வலமும், பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சிறிய மற்றும் பெரிய அளவிலான அலகுகளை குத்திக்கொண்டும் பலர் முதுகில் அலகு குத்திக்கொண்டு டிராக்டர், கார், டெம்போ, லாரி போன்ற வாகனங்களை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து கேரள செண்டை மேளத்துடன் ஸ்வாமி மாவிளக்கு ஊர்வலமும், மாலையில் தாரை தப்பட்டை மேளம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. காலை முதல் பொன் மாரியம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில், பனங்காடு ஊர் மாரியம்மன் கோவில் ஆகியவற்றில் பக்தர்களுக்கு இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் அன்னதானம் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு ஞான சம்பந்தம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பாலக்கோடு நகரத்தில் போக்குவரத்து மாற்றப்பட்டது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இன்று (மார்ச் 1) ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், இரவு 8 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சியும், நாளை (மார்ச் 2) ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், இரவு 7 மணிக்கு லஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்துள்ளனர்.