பதிவு செய்த நாள்
06
மார்
2019
01:03
திருப்பூர்:மகா சிவராத்திரி முன்னிட்டு திருப்பூர் வட்டார சிவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்று, விடியவிடிய வழிபாடு செய்தனர்.மாதம் தோறும் அமாவாசைக்கு முந்தைய தினம் சிவராத்திரியாக பின்பற்றி, சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதில், மாசி மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்பதால், சிறப்பு பெற்றது.
அவ்வகையில் நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) மகா சிவராத்திரி விழா திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், வெள்ளகோவில் செல்வக்குமாரசாமி கோவில், திருப்பூர், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், திருப்பூர், கோல்டன் நகர் காசி விஸ்வநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வர சுவாமி கோவில், குட்டகம், முக்கண்ணீஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.
நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) மாலை துவங்கி, அதிகாலை ஐந்து மணி வரை, மொத்தம், நான்கு கால பூஜைகள் நடந்தன. பரதநாட்டியம் உட்பட பல்வேறு பக்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திருப்பூர், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், அலகு தரிசனம், ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா ஆகியன நடந்தன. மகா சிவராத்திரியன்று நள்ளிரவு, மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அங்காளம்மனை வழிபட்டனர்.