பதிவு செய்த நாள்
06
மார்
2019
01:03
ஈஷாவில் நடந்த உலகின் மிகப் பிரமாண்ட மஹாசிவராத்திரி விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். கோவை ஈஷா யோகா மையத்தில் உலகின் மிகப் பிரமாண்ட மஹாசிவராத்திரி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பாரத குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நம் கலாச்சாரத்தில் மஹாசிவராத்திரி என்பது மிக முக்கியமான ஒரு நாளாகும். குறிப்பாக, இந்நாளில் கோள்களின் அமைப்பு காரணமாக ஒருவருடைய உயிர்சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி நகரும். இதன்காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 25-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு பாரத குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் வரவேற்று ஈஷா யோகா மையத்தில் உள்ள சூர்ய குண்டம், நாகா சந்நிதி, லிங்க பைரவி உள்ளிட்ட சக்திவாய்ந்த இடங்களுக்கு அழைத்து சென்றார். பின்னர், தியானலிங்கத்தில் சத்குருவின் முன்னிலையில் நடந்த பஞ்சபூத ஆராதனையில் கலந்துகொண்டார். இதன்பிறகு, குடியரசு தலைவரும் சத்குருவும் விழா நடக்கும் இடத்துக்கு வருகை தந்தனர். அவருடன் தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித், தமிழக அமைச்சர்கள் திரு.எஸ்.பி.வேலுமணி, திரு.திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மஹாசிவராத்திரி விழாவுக்கு வருகை தந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக குடியரசு தலைவர் மகிழம் மரக் கன்றை நட்டார். பின்னர், அவர்களின் மறைவுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சத்குருவுடன் இணைந்து லட்சக்கணக்கான மக்கள் இந்திய தேசிய கீதத்தை தேசப்பற்றுடன் பாடினர்.
விழாவின் தொடக்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் பேசியதாவது: நம் பாரத தேசத்தின் குடியரசு தலைவர் அவர்கள் ஈஷா மஹாசிவராத்திரி விழாவுக்கு வருகை தந்திருப்பது பெருமிதமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. மேலும், தமிழக ஆளுநர், மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய விருந்தினர்கள் மற்றும் சிவ பக்தர்களை அனைவரையும் மஹாசிவராத்திரி விழாவுக்கு அன்புடன் வரவேற்கிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆதியோகி இறந்த காலத்துக்கு சேர்ந்தவர் அல்ல. அவர் எதிர்காலத்துக்கானவர். இதற்கு முன்பு வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மனித குலம் தனது நன்மையை அறிவியல்பூர்மான முறையில் அடைவதற்கு உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தயாராக உள்ளது.
உங்கள் கடவுள், எங்கள் கடவுள், ஜாதி, மத, இன வேறுபாடுகளை களைந்து எரிய இதுவே சரியான தருணம். மனித குல மேன்மைக்கு பல்வேறு முறைகளை கடைப்பிடித்தாலும், உள்நோக்கிய பயணம் மட்டுமே சரியான விடிவாக அமையும். எத்தகைய மகிழ்ச்சியாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும் உங்கள் அனுபவத்தில் அது உங்கள் உள்நிலையில் தான் அது நடக்கிறது. 112 வழிகளில் மனிதன் மேன்மை அடைய முடியும் என்று உணர்த்தியவர் ஆதியோகி. உள்நோக்கி பயணிப்பதே அனைத்துக்கும் தீர்வாகும். மதத்தில் இருந்து பொறுப்புணர்வுக்கு மாற வேண்டிய தருணம் இதுதான். உங்கள் உணர்ச்சி நிலையில், சிந்தனையில், செயலில் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. மனித குல மேம்பாடு என்பது மனிதர்களின் கையில் தான் உள்ளது. இதை தான் ஆதியோகி உலகுக்கு உணர்த்தினார். உங்கள் அனைத்து தடைகளையும் நீங்கள் விரும்பினால் தான் உடைத்து வெளி வர முடியும். இவ்வாறு சத்குரு பேசினார். இதை தொடர்ந்து ஆதியோகி வரலாறு பேசும் கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசனம் என்ற 3 டி ஷோவை குடியரசு தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பிரபல இசையமைப்பாளர்கள் திரு.அமித் த்ரிவேதி, திரு.ஹரிஹரன் மற்றும் பாடகர் திரு.கார்த்திக் உள்ளிட்டோரின் இசை கச்சேரி நடைபெற்றது. நள்ளிரவில் சத்குருவுடன் இணைந்து அனைவரும் சக்திவாய்ந்த தியானத்தில் பங்கேற்றனர். இதுதவிர லிங்க பைரவி மஹா யாத்திரை, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்திருந்த தலைசிறந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற்றது. மஹாசிவராத்திரி விழாவுக்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர். உலகின் மிகப் பிரமாண்ட மஹாசிவராத்திரி விழாவாக இது அமைந்தது. மத்திய ரயில்வே அமைச்சர் திரு.பியூஷ் கோயல், நடிகைகள், தமன்னா, காஜல் அகர்வால் மற்றும் நடிகர் ராணா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டனர். இவ்விழாவை மேலும் அழகூட்டும் விதமாக நாட்டு மாடுகள் கண்காட்சி, தலைப்பாகை கட்டுதல், வீதி நாடகங்கள், பல்வகை சேலை உடுத்தும் பயிற்சி, பல மாநில உணவு அரங்கங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மஹாசிவராத்திரி விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.