பதிவு செய்த நாள்
07
மார்
2019
12:03
சேலம்: சேலம் அருகே, மூன்று நாட்களாக, சைலகிரீஸ்வரர் மீது படும் சூரிய ஒளியை, பக்தர்கள் கண்டு பரவசமடைகின்றனர். சேலம், திருமலைகிரியில், புதிதாக கட்டப்பட்ட, சைலகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 2015ல் நடக்க இருந்தது. ஆனால், இரு தரப்பு மோதலால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமைதி பேச்சு மூலம் சமரசம் ஏற்பட்டு, மார்ச், 1ல், கோவில் திறக்கப்பட்டது. 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அன்று காலை, 6:30 முதல், 7:30 மணி வரை, சூரிய ஒளி, கோபுர வாசலை கடந்து, மூலவர் ஆவுடையார் பீடத்தில் இருந்து, உச்சி வரை, சைலகிரீஸ்வரர் மீது பட்டது. மூன்றாவது நாளாக, நேற்று காலையும் சூரிய ஒளி விழுந்தது. இதை பார்த்து, பக்தர்கள் வியந்தனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: கோவிலை, நான்கு ஆண்டுகளாக பூட்டியே வைத்திருந்ததால், தெய்வ குற்றம் ஏதும் இருக்குமோ என அச்சமடைந்தோம். ஆனால், சூரியன் வடிவில், ஈசன் அச்சப்பட தேவையில்லை என உணர்த்துவதாக கருதுகிறோம். தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், குறிப்பிட்ட நாட்களில், சூரியன் அஸ்தமிக்கும்போது, மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வை பார்த்துள்ளோம். எங்கள் ஊரில், புதிதாக கட்டிய சிவனை, சூரியன் வழிபட்டு செல்வதாக கருதுகிறோம். மூன்று நாட்களாக நடந்த இந்நிகழ்வு, எத்தனை நாளைக்கு நீடிக்கும் என தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.