பதிவு செய்த நாள்
07
மார்
2019
12:03
திருத்தணி: கோடை வெயில் கொளுத்துவதால், பக்தர்களின் வசதிக்காக, திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மாடவீதியில் தரைவிரிப்பு போடப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை வழிபட்டுச் செல்கின்றனர். அனல் காற்றுசில நாட்களாக, திருத்தணி பகுதியில், அதிகளவில் வெயில் கொளுத்துவதால், பக்தர்கள், மலைக்கோவில் மாடவீதியில் நடப்பதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மாடவீதி நடைப்பாதை சுடுவதால், இதமாக இருக்க, கோவில் நிர்வாகம், மாடவீதியைச் சுற்றிலும், தேங்காய் நாரிலான தரை விரிப்பு அமைத்துள்ளது.கோடைக்காலங்களில், தமிழகத்திலேயே திருத்தணியில் தான் வெயில் அதிகம். மேலும், அனல் காற்றும் வீசும். காரணம் திருத்தணியைச் சுற்றி மலைகள் அதிகளவில் உள்ளதால், வெப்பத்தின் தாக்கம் கோடையில் அதிகளவில் இருக்கும்.
ரூ. 2.05 லட்சம்: இதனால், முருகன் மலைக்கோவிலில் கடுமையான வெப்பம் உள்ளதாலும், கோவில் பொது நிதியில் இருந்து, 2.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தேங்காய் நாரால் தயாரிக்கப்பட்ட கால் தரைவிரிப்பு, மாடவீதி சுற்றியும் போடப்பட்டு உள்ளது. மொத்தம், 6 அடி அகலமும், 400 மீட்டர் நீளமுள்ள தரைவிரிப்பான் அமைக்கப்பட்டுஉள்ளது.இந்த தரைவிரிப்பின் மேல், பக்தர்கள் நடந்துச் செல்வதால், வெயில் தாக்கம் குறையும். இதுதவிர, அடுத்த மாதம் முதல், வெயிலில் இருந்து பக்தர்களைப் பாதுகாக்க, கோவில் சார்பில் நீர்மோர் வழங்கப்பட உள்ளது.