பதிவு செய்த நாள்
08
மார்
2019
02:03
குமாரபாளையம்: குமாரபாளையம், காளியம்மன் கோவிலில், மகா குண்டம் திருவிழாவை யொட்டி தேர்த் திருவிழா நடந்தது.
குமாரபாளையம், காளியம்மன் கோவில் மகா குண்டம் பூமிதி திருவிழா நேற்றுமுன்தினமும், நேற்று (மார்ச்., 6, 7ல்) தேர்த் திருவிழாவும் நடந்தது. மலர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தவாறு வந்தார்.
மக்கள் தங்கள் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து, வண்ண கோலமிட்டு அம்மனை வரவேற்று, தேங்காய், பழங்கள் கொடுத்து பூஜை செய்தனர். தரைப்பகுதியிலும், மாடிகளில் இருந்தவாறும், பழங்கள், நாணயங்கள் ஆகியவற்றை மக்கள் வீசினர். கோவில் வளாகத்தில் துவங்கிய தேரோட்டம் ராஜா வீதி, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, பாலக்கரை சாலை வழியாக சென்று, புத்தர் வீதி நுழைவுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று (மார்ச்., 8ல்), மீண்டும் துவங்கும் தேரோட்டம், கோவில் வளாகத்தில் நிலை நிறுத்தப்படும். பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு, வண்டி வேடிக்கை நடந்தது. பக்தர்கள் கடவுள்களின் வேடமிட்டு, பல வாகனங்களில் வலம் வந்தனர். சேலம் சாலையில், இரு புறமும், 2 கி.மீ., தூரத்திற்கு பொதுமக்கள் திரண்டு, நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.