பதிவு செய்த நாள்
08
மார்
2019
02:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் வெள்ளித்தேரோட்டம் இன்று நிறைவு பெறுகிறது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 12ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து, கோவிலில் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.கடந்த மாதம், 19ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும்; கடந்த, 1ம் தேதி பூவோடு வைத்தல். 2ம் தேதி காலை, கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம், 12 அடி உயரமுள்ள மரத்தேரில் விநாயகரும்; 21 அடி உயரமுள்ள வெள்ளித் தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கோவிலில் இருந்து, மார்க்கெட் ரோடு வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று பகலில், தேரின் சக்கரத்தில், உப்பு, மிளகு கொட்டி, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, இரவு தேரோட்டம் துவங்கி, உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியில் இரண்டாம் நாள் தேர்நிலை நிறுத்தப்பட்டது. இன்று, தெப்பக்குளம் வீதி வழியாக இரவு 9:30 மணிக்கு தேர்நிலைக்கு செல்லும் நிகழ்ச்சியும்; அம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி, தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது.நாளை, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 11ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிஷேகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.