பதிவு செய்த நாள்
12
மார்
2019
12:03
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவிலில், இந்தாண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம், நேற்று இரவு ஏற்றப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடக்கும், பங்குனி உத்திர பிரம்மோற்சவம், விசஷேமானது. நான்கு ஆண்டுகளாக, இவ்விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு, கண்டிப்பாக நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, கோவிலில் கொடியேற்ற விழா நடத்த, கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், கோவில் அருகே உள்ள தெருவில், ஒருவரின் மரணத்தால், இப்பணி தடைப்பட்டது. பின், மாலையில் கொடியேற்றம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவில், பழைய உற்சவர் சிலையை வீதியுலாவுக்கு பயன்படுத்த வேண்டும் என, பக்தர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், ‘பிரம்மோற்சவம், வழக்கம் போல் நடத்த வேண்டும். மூன்று மணி நேரத்தில், சிதிலம் அடைந்த பழைய உற்சவர் சிலையை, ஜடிபந்தனம் செய்து, வீதியுலாவுக்கு பயன்படுத்த வேண்டும்’ என, நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாக, தகவல் வந்தது. இதையடுத்து, கோவில் வளாகத்தில், அறநிலையத் துறை அதிகாரிகள், ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை அறிந்த பக்தர்கள், உபயதாரர்கள், கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முன் கூடி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்படி, கோஷமிட்டனர். இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், அறநிலையத் துறை உதவி ஆணையர், ரமணியிடம், மொபைல் போனில் பேசினார். அப்போது, ‘பழைய சிலையை வைத்து உற்சவம் நடத்துங்கள். விழாவிற்கு பாதுகாப்பு தேவையென்றால் ஏற்பாடு செய்கிறேன்’ என, கூறினார். இதையடுத்து, இரவு, 7:00 மணிக்கு, பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், ஏகாம்பரர் கோவிலில் நடந்தது. காலையில் இருந்து, கோவிலில் காத்திருந்த பக்தர்கள், பழைய உற்சவரை பயன்படுத்தி பிரம்மோற்சவத்தை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், சந்தோஷம் அடைந்துள்ளனர். திருத்தணி: திருவாலங் காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன், நேற்று நடந்தது. 23ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.