சபரிமலை: சபரிமலையில் 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு நடை திறந்தது. தொடர்ந்து சுத்திகிரியைகள் நடந்தது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.7:00 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கொடிப்பட்டத்துக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்தினார்.
கொடிமரத்திற்கு பூஜைகள் நடத்திய பின்னர் 8:05 மணிக்கு தங்க கொடிமரத்தில் தந்திரி கொடியேற்றினார். நேற்று முதல் 20-ம் தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் இரவு ஸ்ரீபூதபலி, இன்று இரண்டாம் நாள் விழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உற்சவபலியும், 16-ம் தேதி ஐந்தாம் நாள் விழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் இரவு யானை மீது சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. 21-ம் தேதி காலையில் உஷபூஜை, மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறுகிறது. அன்று இரவு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்.