பதிவு செய்த நாள்
13
மார்
2019
12:03
போடி: போடி சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத்துறை மூலம் கோம்பையில் 15, 16 ம் நுாற்றாண்டின் யானை குத்திப்பட்டான் என அழைக்கப்படும் வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்லுாரி முதல்வர் ராஜகுமாரன் தலைமையில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர்கள் மாணிக்கராஜ், கனகராஜ், மாணவர்கள் ராம்குமார், நந்தகுமார் பழமையான கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள கற்கால பொருட்களை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போடி அருகே கோம்பை –- உத்தமபாளையம் ரோட்டில் கிச்சியம்மன் கோயில் அருகே கி.பி.15,16 ம் நுாற்றாண்டை சேர்ந்த யானை குத்திப்பட்டான் என அழைக்கப்படும் ‘வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாணிக்கராஜ் கூறியதாவது: போடி அருகே மலையும், மலை சார்ந்த இடமாக, விவசாய நிலங்களாக கோம்பை பகுதி அமைந்துள்ளது. இங்கு காட்டு யானைகளிடமிருந்து விளைநிலங்கள், கால்நடைகள், மனிதர்களை பாதுகாக்கும் வகையில் வீரன் ஒருவன் யானையுடன் போரிட்டு கொன்று, தானும் மரணமடைந்துள்ளான். அவரின் வீரமரணத்தை போற்றும் வகையில் மூன்றரை அடி உயரத்தில் வீரன் யானையுடன் போர் செய்யும் சண்டைக்காட்சியை புடைப்பு சிற்பமாக வடித்து கல்நட்டு வழிபட்டு வருகின்றனர். இந்த நடுக்கல்லில் வீரனின் உருவம் துவிபங்க நிலையில் நின்று, தனது இருகைகளினால் பற்றியுள்ள நீண்ட வாளால் யானையின் கழுத்துப்பகுதியில் குத்துவது போன்று காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. குத்துப்பட்டதால் வலி தாங்க முடியாத யானை தனது வாலையும், தும்பிக்கையையும் மேலே உயர்த்தி பிளிறுவதுபோல உள்ளது. வீரனின் தலையில் வலதுபக்கம் அள்ளி முடித்துக் கட்டிய கொண்டையும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, சவடி போன்ற அணிகலன்கள் காட்டப்பட்டுள்ளது.
வீரர்கள் அணியும் மரவுரி ஆடையும், இடுப்பில் குறுவாளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனுக்கு மேல்பகுதியில் பிறை நிலவும், சூரியனும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வீரன் வீரமரணம் அடைந்துள்ளான் என்பதை காட்டுகிறது. யானையின் உருவத்தை விட வீரனின் உருவம் பெரிதாக உள்ளதால் வீரன் யானையை கொன்றுள்ளான் என்பதை காட்டுகிறது. இது போன்று யானை குத்திப்பட்டான் நடுகற்கள் அல்லது வீரகற்கள் தமிழகத்தில் மலையும், மலை சார்ந்த பகுதிகளில் தமிழர்களின் சமூக பண்பாட்டு அடையாளங்களை வெளிகாட்டுவதோடு, வீரர்களை தெய்வமாக வணங்கும் வகையில் வீரக்கல்லின் தடயங்கள் சான்றாக அமைந்துள்ளது. இவ்வீரக்கல் 15, 16 ம் நுாற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது, என்றனர்.