பதிவு செய்த நாள்
13
மார்
2019
12:03
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, மாசி கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:00 மணிக்கு, வெள்ளிமயில் வாகனத்தில் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று, செவ்வாய்கிழமை முருகப் பெருமானுக்கு உகந்தநாள், சஷ்டி மற்றும் கிருத்திகை என்பதால், வழக்கத்திற்கு மாறாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.இதனால் பொதுவழியில், நான்கு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.