பதிவு செய்த நாள்
14
மார்
2019
11:03
கோவை: கோவையில் உள்ள ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் முன்னிலையில், வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. நன்னீராட்டு பெருவிழாவுக்காக, காலை 4:30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ஆறாம் கால யாக பூஜை, த்ரவ்யாஹூதி, 6:00 மணிக்கு மேல், பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, கருவறையில் தண்டுமாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர், கலசங்களுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரத்தில் 5 கலசங்களும், விநாயகர், கருப்பராயன், நவக்கிரகம் என மொத்தம் 12 கலசங்கள் வைக்கப்பட்டன. 6:45 மணிக்கு நடைபெற்ற மகாகும்பாபிஷேகத்தில், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதினம் தவத்திரு சாந்தஸ்ரீ சிவலேங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, யாகசாலைகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, கோவில் கோபுரங்களை சுற்றியும், கலசங்களின் மீது தீர்த்தம் ஊற்றப்பட்டது. ராஜகோபுரத்தை அடுத்து விநாயகர், கருப்பராயன் நவக்கிரக சன்னதிகளுக்கும், மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.