பதிவு செய்த நாள்
14
மார்
2019
12:03
சூலுார்: ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.சூலுார் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளி யம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கடந்த பிப்., 26ம் தேதி பூச்சாட்டுதலுடன், திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. கடந்த, 5ம் தேதி கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு அபிஷேகமும், பக்தர்கள் பூவோடு எடுத்து ஆடுதலும் நடந்தது.
கடந்த 11ம் தேதி விநாயகர் பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று காலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நடந்தது. இன்று காலை முதல் மாலை வரை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், மடிப்பிச்சை ஏந்தியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாக்களை வெட்டி வழிபாடு நடந்தது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.