ராமேஸ்வரம்: கச்சத்தீவு திருவிழாவுக்கு இன்று (மார்ச் 15) ராமேஸ்வரத்தில் இருந்து 2,451 பக்தர்கள் பயணம் செய்ய உள்ளனர். பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச்சில் இன்று மாலை 5:00 மணிக்கு திருவிழா கொடி ஏற்றப்பட உள்ளது. நாளை (மார்ச் 16) காலை சர்ச் முன்பு திருவிழா திருப்பலி பூஜையை இருநாட்டு பாதிரியார்கள் இணைந்து நடத்த உள்ளனர்.
இவ்விழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை 63 விசைப்படகுகள், 14 நாட்டு படகில் 2,451 பக்தர்கள் பயணம் செய்கின்றனர்.இன்று ராமேஸ்வரம் துறைமுகம் பாலம் முன் மத்திய, மாநில உளவு போலீசார், சுங்கத்துறை பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் படகில் செல்ல அனுமதிக்கப்படுவர். செய்தியாளர்கள் புறக்கணிப்பு: கச்சத்தீவு விழா செய்தி சேகரிக்க செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை துணை துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் பத்திரிக்கையாளர்கள் செல்லவில்லை.