சின்னமனூர்: குச்சனூர் ராஜவாய்க்காலில் நீர் திறக்கப்படாததால் சுரபி நதியில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தில் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
குச்சனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. அனுகிரக மூர்த்தியாக அருள் பாலிக்கும் மூலவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருமணத்தடை நீக்கும் தலமாக இருப்பதால் வாரத்தின் சனிக்கிழமைகளில் வெளியூர் பக்தர்களின் வருகையால் கோயில் களை கட்டும். கோயிலுக்கு எதிரேயுள்ள சுரபி நதியில் நீராடி, கோயில் கொடிமரத்தில் எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனிதிசை நடப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
முல்லை பெரியாறு ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாத தால், சுரபி நதிக்கு நீர் வரத்தில்லை. குச்சனூர் பேரூராட்சி கழிவுநீர் கலப்பதாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் சுரபி நதி மாசடைந்துள்ளது. இதனால் பரிகாரம் செய்ய வரும் பக்தர்கள் நதியில் கால் கூட நனைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள தண்ணீரில் கழிவுகள் கலந்து துர்நாற்றம் வீசுவதால் கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் நடமாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுரபி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பேரூராட்சி நிர்வாகமும், தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.