பதிவு செய்த நாள்
01
ஏப்
2019
11:04
கிருஷ்ணகிரி: மழை வேண்டி, கிராமத்திலிருந்து அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்ற கிராம மக்கள், அங்கு சுவாமி வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மேடுகம்பள்ளி, கச்சாலிகானுார், மூலக்கொல்லை ஆகிய பகுதிகளில், 15 ஆண்டுகளாக போதிய மழையின்றி, கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், மாரியம்மன் பண்டிகையும் நடக்காமல் உள்ளது. மழை வேண்டி மூன்று கிராம மக்கள், ஒரு நாள் மட்டும் ஊரை காலி செய்து, ஊர் எல்லையில், ஒருவரை காவல் வைத்து, அருகில் உள்ள ஒரு தோட்டத்துக்கு ஆடு, மாடுகளுடன் சென்றனர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். சிறிய குடிசை அமைத்து, அதில், அம்மன் சிலையை வைத்து படையலிட்டு, மாவிளக்குடன் ஊர்வலமாக சென்று, சுவாமியை வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, கிராம மக்கள் மேள தாளத்துடன் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஊர் எல்லையில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை செய்தனர். பின், அனைவரும், வீடுகளுக்கு திரும்பினர்.