மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இக் கோயிலில் கடந்த பிப்ரவரி 11 ந் தேதி கும்பாபிஷே விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலில் சுவாமி மண்டபத்தில் கலசங்களில் நீர் நிரப்பி வைத்து யாகம் வளர்க்கப்பட்டு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் கடங்களை சுமந்து கோயில் உள் பிரகாரத்தை சுற்றி வந்து மூலவர் ஆனந்தவல்லி அம்மனுக்கும் சோமநாதர் சுவாமிக்கும் புனிதநீரால் அபிஷேகம் நடத்தினர். பின்பு அம்மனும் சுவாமியும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். கும்பாபிஷே விழா மலர் வெளியிடப்பட்டது. மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் இரவு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.