பதிவு செய்த நாள்
05
மார்
2012
10:03
திருச்சி : திருச்சி திருவானைக்காவலில் தயாராகும் களிமண் அகல் விளக்குகள், லண்டனில் உள்ள இந்து கோவில்களுக்கு, கொண்டு செல்லப்படுகின்றன. திருச்சி, திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டை குயவர் தெருவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், களிமண் சட்டி, பானை, அடுப்பு, அகல் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, 10 குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மண் பாண்டங்கள் செய்யும் வேலையில் ஈடுபடுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், நாள் முழுவதும் பணிபுரிந்தாலும், அதற்குரிய வருமானம் இல்லாமல் அவதிப்பட்டனர். இவர்களின் வாழ்வில் ஒரு பொன் வசந்தமாக, இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் மற்றும் நார்வே நாட்டுக்கு அகல் விளக்குகளை வாங்கிச் செல்பவர்கள் அதிகரித்துள்ளனர்.
இது குறித்து, திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டை குயவர் தெருவைச் சேர்ந்த ராமு கூறியதாவது: நாங்கள், பரம்பரை பரம்பரையாக, இத்தொழிலைச் செய்து வருகிறோம். வேறு தொழில் செய்ய விரும்பாததால், நிரந்தர வருமானம் இல்லாவிட்டாலும், இதே தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகையின்போது, பொங்கல் பானைகள், கார்த்திகை மாதத்தில் அகல்விளக்குகள், கோடை காலத்தில் குடிநீர் பானைகள் என சீசனுக்கு உண்டான களிமண் பொருட்களை தயாரித்து வந்தோம். கடந்த பொங்கல் பண்டிகையின்போது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் என்னைச் சந்தித்தனர். லண்டனில் உள்ள இந்து கோவில்களுக்கு, அகல் விளக்குகள் வேண்டும் என்று கேட்டு, 10 ஆயிரம் விளக்குகளை வாங்கிச் சென்றனர். தற்போது, 50 ஆயிரம் விளக்குகளுக்கு "ஆர்டர் கொடுத்துள்ளனர். லண்டன் மட்டுமல்லாது, நார்வே நாட்டுக்கும் இந்த விளக்குகளைக் கொண்டு செல்வோம் என்று தெரிவித்தனர். உள்ளூரில் விற்பதை போலவே ஒரு விளக்கு 70 பைசாவுக்கு அவர்களுக்கு கொடுக்கிறோம். வழக்கமாகச் செய்யும் விளக்கு போல மூக்கு இல்லாமல், வட்டமாக வாய் வைத்து விளக்கு செய்கிறோம். மற்றபடி, சிறப்பான வடிவமைப்போ, வர்ணமோ பூசவில்லை. வீட்டிலேயே வந்து அவர்கள் விளக்கை வாங்கிக் கொள்கின்றனர்.
*இங்கேயும் "கரண்ட் பிரச்னை: மோட்டார் மூலம் ஓடும் சக்கரத்தில் வைத்து, ஒரு நாளைக்கு 1,500 விளக்குகள் வரை செய்கிறோம். கடுமையான மின்வெட்டு காரணமாக, ஆயிரம் விளக்குகள்கூட செய்ய முடியவில்லை. என்னிடம், வெளிநாட்டுக்காரர்கள் விளக்குகள் வாங்க வந்தபோது, மணிக்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்படுவதைப் பார்த்து, ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் நாட்டில் மின்வெட்டு என்பதே கிடையாதாம்.இவ்வாறு அவர் கூறினார்.