வத்தலக்குண்டு :வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில், அனைத்து சமுதாயமும் ஒன்று சேர்ந்து,வீட்டிற்கு ஒரு படி அரிசி கொடுத்து ஆண்டுதோறும் கோபாலசாமி கோயிலில் அன்னதானம் நடத்தி வருகின்றனர். ஒன்பது தலைமுறைக்கு முன்பு கருமாத்தூரில் இருந்து ஆந்திர தொட்டிய நாயக்கர்கள் ஜி.தும்மலபட்டிக்கு வந்துள்ளனர். இவர்களது முன்னோர் சுல்லம நாயக்கரின் வழியாக, பூலத்தூர் மலை அடிவாரத்தில் சுயம்புவாக தோன்றிய கோபாலசாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மூன்றாம் வாரம் அன்னதானம் நடக்கிறது. பூசாரிகளாக தொட்டிய நாயக்கர்கள் இருந்தாலும், ஊரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரையும் இணைத்து ஒன்பது ஜாதி மிராஸ்தார்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. முஸ்லிம்கள் இதே ஊரில் வசித்ததால் அவர்களுக்கு தனி சிறப்பு வழங்கப்படுகிறது. வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் முதற்கொண்டு, தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பது வரை இக்கோயிலுக்கு வந்து சகுணம் பெற்று செல்கின்றனர். ஜாதி, மத பாகுபாடு இல்லாமல், இந்த அன்னதானம், கிராமத்தின் ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.