உளுந்தூர்பேட்டை:கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைப் பெருவிழா சாகை வார்த்தலுடன் நேற்று (ஏப்., 2ல்) துவங்கியது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரைப் பெருவிழா நேற்று (ஏப்., 2ல்) மாலை 4:00 மணிக்கு சாகை வார்த்தலுடன்துவங்கியது.
கூவாகம், கூவாகம் காலனி மற்றும் சுற்றியுள்ள ஏழுகிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து மாரியம்மனுக்கு படையலிட்டனர்.
அப்போது சுவாமிக்கு தீபாராதனை வழிபாடு நடந்தது. ஏராளமான பெண்கள் வழிபட்டனர். 16ம் தேதி வரை விழா நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வர்.