சித்திரை பெருவிழா: ஏப்.19 வைகையில் இறங்கும் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2019 11:04
மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா முக்கிய நிகழ்வாக ஏப்.,19 அதிகாலை 5:45 முதல் காலை 6:15 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
இதற்கான கொட்டகை முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நடந்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண விழா முடிந்ததும் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளும் விழா சித்ரா பவுர்ணமி அன்று நடக்கும். அழகர்கோவில் துணை கோயிலான தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நேற்று காலை 9:40 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளர் வேடம் பூண்டு அழகர் ஏப்.,17 மாலை 6:00 மணிக்கு மதுரை புறப்படுகிறார். ஏப்.,18 ல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. 19 ல் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் அதிகாலை 5:45 மணிக்கு மேல் 6:15 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இரவு அழகர் எழுந்தருள்கிறார்.ஏப்., 20 கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் புறப்படுகிறார். பின் கருட வாகனத்தில் தேனுார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருகிறார். ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. 21 ல் அதிகாலை மோகனாவதாரத்தில் காட்சி தருதல், ராஜாங்க திருக்கோலத்தில் கள்ளழகர் அனந்தராய பல்லக்கில் எழுந்தருளி சேதுபதி மண்டபம் வந்தடைகிறார். இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. ஏப்.,22 அதிகாலை மதுரையிலிருந்து கள்ளழகர் அழகர்கோவில் புறப்படுகிறார். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்து வருகின்றனர்.