மதுரை: மதுரையில் கட்டடங்களை உயர்த்தும் தொழில் நுட்பம் சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. கடந்தாண்டு முதல் முறையாக எல்லீஸ்நகரில் ஒரு வீடு 5 அடி உயர்த்தப்பட்டது. தற்போது புது நத்தம் ரோடு நாராயணபுரம் மந்தையம்மன் கோயில் 5 உயர்த்தப்பட்டு 25 அடி நகர்த்தப்படுகிறது.
இக் கோயில் கட்டடம் 350 டன் எடை, 12 அடி உயரம், 65 அடி நீள, அகலத்துடன் 4,225 சதுரடி பரப்பில் உள்ளது. கட்டடத்தை உயர்த்தும் முன்பு உள்ளே சுவர் ஓரம் பள்ளம் தோண்டப் பட்டது. பேஸ்மட்ட பக்கவாட்டு சுவர்களை சுற்றி குறிப்பிட்ட இடைவெளியில் உள்ள கற்களை அகற்றி 400 ஜாக்கிகள் பொருத்தி 5 அடிக்கு உயர்த்தப்பட்டது.
பேஸ்மட்டத்துடன் இணைந்துள்ள கட்டடத்தின் கீழே இரும்பு பட்டைகள் பொருத்தி வெல்டிங் வைக்கப்பட்டது. இரும்பு பட்டைகளின் கீழே நகரக்கூடிய "பேரிங் ஜாக்கிகள் பொருத்தி அதன் ஒரு முனையில் கட்டடத்தை நகர்த்த சுழலும் "ஜாக்கிகள் இணைக்கப்பட்டது. நகர்த்தும் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று (ஏப். 5ல்) காலை 10:00 மணிக்கு பணியாளர் கள் கட்டடத்தை நகர்த்த துவங்கினர். காலை 11:00 மணிக்குள் 2 அடிக்கு நகர்த்தப்பட்டது.
"அப்லிப்ட்டிங் தொழில்நுட்பம்: சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் நிர்வாகி அன்பில் தர்ம லிங்கம் கூறியாதவது: பறக்கும் பாலம் அமைக்க ரோடு விரிவாக்கப் பணி நடக்கிறது. கோயிலை இடித்து கட்ட விரும்பாத நிர்வாகிகள் நகர்த்தி தர அணுகினர். நான் பல கட்டடங்களை உயர்த்தி, நகர்த்தும் பணிகளை செய்ததால் இத்தொழில் நுட்பம் குறித்து விளக்கினேன்.
நேற்று (ஏப்., 5ல்) கோயிலை நகர்த்தி "பரிசோதனை செய்யலாம் என திட்டமிட்டோம். முழுமையாக நகர்த்துமளவு பணி எளிதானது. பழமை மாறாமல் புனரமைப்பு: கோயில் பூசாரிகள் தாமோதரன் சுகுமார், அங்கப்பன் கூறியாதவது: கோயிலை இடித்தால் பழமை மாறி விடும். கோபுரம், சுவர்களிலுள்ள சிற்பங்களை பழைய வடிவத்திற்கு கொண்டு வர முடியாது. ஒரு கோடி ரூபாய் செலவாகும். தற்போது நகர்த்த 25 லட்சம் ரூபாய் செலவானது. மூன்று மாதங்களுக்கு முன் துவங்கிய பணி முடியும் நிலையிலுள்ளது. கோயில் வளாகத்திலுள்ள மூன்று சிறிய பிரகாரங்களும் உயர்த்தி, நகர்த்தப்படுகின்றன என்றனர்.