மேல்மலையனூர் கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2012 11:03
அவலூர்பேட்டை :மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு நேற்று அதிகளவு பக்தர்கள் வந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. இரவு அம்மன் வீதிஉலாவும், காப்பு களைதல் உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினத்துடன் 13 நாள் திருவிழா முடிந்தது. இருந்தும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். அக்னி சட்டி எடுத்தும், சித்தாங்கி ஆடை அணிந்தும், நாக்கு, தாடை பகுதிகளில் அலகு குத்தியும், மொட்டை அடித்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். குடும்பத்துடன் வாகனங்களில் வருகை தந்த பக்தர்கள் கடா, கோழி வெட்டி, சாமி கும்பிட்டனர். பக்தர்களின் வாகனங்கள் கோவிலுக்கு செல்லும் வழியிலிருந்து வள்ளலார் சபை வரை வழிநெடுகிலும் நின்று சென்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.