பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
02:04
மகுடஞ்சாவடி: கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது. இளம்பிள்ளை அருகே, கே.கே., நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஐய்யனாரப்பன், கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மார்ச், 22ல் யாகசாலை பூஜை துவங்கியது. கடந்த, 5ல் தீர்த்தக்குடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.
அதில், 2,500 பக்தர்கள் கையில் காப்பு கட்டினர். நேற்று, கஞ்சமலை காலாங்கி சித்தர்கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீராடி, குடங்களில் தீர்த்தம் நிரப்பி பூஜை செய்தனர். பின் அவற்றை, தலையில் சுமந்தபடி யானை, குதிரை முன்னே செல்ல தாரை, தப்பட்டை, அதிர்வேட்டு முழங்க பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தை அடைந்தனர். ஊர்வலத்தில், 2,500க்கும் மேற்பட்டவர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். மாலையில் விநாயகர் வழிபாடு, முதற்கால யாகவேள்வி, பூர்ணாஹூதி நடந்தது. இன்று காலை, 8:35 மணிக்கு இரண்டாம் கால யாகவேள்வி, வேதபாராயணம் நடக்கிறது. நாளை காலை, 9:15 மணிக்கு மேல், 10:15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.