கூடலுார்: கூடலுார் அருகே தமிழக –கேரள எல்லையான வின்னேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
எனினும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய கோயில் ஒவ்வொரு ஆண்டும் சேதமடைந்து,தற்போது முழுமையாக அழியும் நிலையை அடைந்துள்ளது. அங்குள்ள கண்ணகி சிலையும் உடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாட மட்டும், கோயில் வளாகத்தில் பெயரளவிற்கு சீரமைப்பு பணியை செய்து விட்டு, அதன்பின் கண்டு கொள்வதில்லை. சீரமைப்பு இல்லை: இக்கோயிலை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கேரள உயர்நீதி மன்றத்தில் 2014 ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கோயிலை சீரமைக்க தொல்லியல் துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி சீரமைக்க ரூ.39 லட்சத்து 33 ஆயிரத்து 725 க்கு திட்ட மதிப்பீடு செய்து டெண்டர் விடப்பட்டது. சீரமைப்பு பணி துவங்கும் என பக்தர்கள் எதிர்பார்த்திருந்தும் நடக்கவில்லை. கடந்த 2 ஆண்டாக அதற்கான பணிகள் நடைபெறாததால் புலம்பி வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம்: கண்ணகி அறக்கட்டளை ,தமிழகத்தை போன்று கேரளாவிலும் உருவாகியிருக்கிறது. இரு மாநில மக்களும் கண்ணகியை வழிபடத் துவங்கியிருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் 100 பேர் மட்டுமே சென்று வணங்கி வந்த கோயிலில், தற்போது சித்ரா பவுர்ணமி நாளில் பக்தர்கள் கூட்டம் 30 ஆயிரத்தையும் தாண்டி வருகிறது. இந்தாண்டு விழா ஏப். 19 ல் நடக்கிறது.
பனியன்குடி பாதை: இக்கோயிலுக்கு செல்ல குமுளியில் இருந்து 16 கி.மீ., துார கேரள வனப்பாதையும், தமிழகப்பகுதியில் இருந்து 6.6 கி.மீ., துார தமிழக வனப்பகுதியில் நடைபாதையும் உள்ளது. குமுளியில் இருந்து கோயிலுக்கு ஜீப்கள் இயக்கப்படுகின்றன. நடந்தும் பக்தர்கள் செல்கின்றனர். தமிழகப்பகுதியான லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து நடந்து செல்லும் வனப்பாதையை ஜீப் செல்லும் வகையில் தார்ச்சாலையாக அமைக்க வேண்டும் என தமிழக பக்தர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தபடி உள்ளனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லாமல் தொடர்ந்து நடைபாதையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க கண்ணகி கோயிலை முழுமையாக சீரமைத்து, தமிழக வனப்பாதையில் ஜீப் செல்வதற்கான பாதை அமைக்கப்பட்டால், கோயிலுக்கு செல்ல அனுமதி கேட்டு கேரள வனத்துறையிடம் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. பெரியாறு அணைப் பிரச்னையில் பல உரிமைகளை கேரளாவிற்கு பறிகொடுத்ததுபோல், கண்ணகி கோயில் விஷயத்திலும் கேரளாவிடம் உரிமைகள் முழுவதுமாக செல்வதற்குள் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.