திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா நேற்று (ஏப்., 9ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரம் கிராமத்தில் பழமையான கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
இதில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா நேற்று (ஏப்., 9ல்) கொடியேற்றத் துடன் துவங்கியது. பகல் ஒரு மணிக்கு மாரியம்மன், அம்மச்சார் அம்மன் சுவாமிகளுக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு 10:00 மணிக்கு, கூத்தாண்டவருக்கு கொடியேற்றி, காப்பு கட்டப் பட்டது. தொடர்ந்து காட்டு குகைக் கோவிலில் இருந்து இந்திர விமானத்தில் வாணவேடிக்கை யுடன் கூத்தாண்டவர் ஊரில் உள்ள கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். இன்று (ஏப்., 10ல்) முதல் வரும் 24ம் தேதி வரை தினசரி மாலை 4:00 மணிக்கு, கூத்தாண்டவர் சுவாமி சன்னதியில், மகாபாரத ஆன்மிகச் சொற்பொழிவு நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, 24ம் தேதி காலை 9:00 மணிக்கு கூத்தாண்டவர் யுத்த கோலத்தில், பெருந்தேர் வடிவில், வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.