சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் தங்க பல்லக்கில் பவனி வருகின்றனர்.
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்து தொழில்களைக் கடவுள் செய்கிறார். இதில் ‘மறைத்தல்’ தொழிலை தங்கப்பல்லக்கு குறிக்கிறது. பல்லக்கின் மேல் உள்ள திரைச்சீலை, தொங்கும் குஞ்சங்கள் காற்றில் அசைந்து சுவாமியை மறைக்கும். நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதை அறிந்தவர் கடவுள் ஒருவரே. பல்லக்கில் இருக்கும் சுவாமியை மறைக்கும் திரையும், குஞ்சங்களும் இதையே உணர்த்துகின்றன. நாளை நல்லது நடக்கும் என தெரிந்தால், மனிதன் ஆணவம் கொள்கிறான். துன்பம் என்று தெரிந்தால் கவலைப்படுகிறான். எல்லாம் முன் கூட்டியே தெரிந்து விட்டால், வாழ்வில் சுவை இருக்காது. எதுவும் நடக்கலாம் என்றால் நன்மை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். உற்சாகமுடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். எனவே, ‘கடமையில் கவனம் செலுத்து’ என்ற தத்துவத்தை தங்கப்பல்லக்கில் பவனி வரும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் உணர்த்துகின்றனர்.