பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
11:04
சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. ஏப். 17 ல் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
பிரசித்தி பெற்ற சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப். 6ல் பிடாரியம்மன் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை 10:05 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்டவற்றால் கொடிமர பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகாராஜ பட்டர் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்தனர். காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விரியன்சுவாமி, வர்த்தக சங்க தலைவர் சிவகாமிநாதன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் விலங்கையா, நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் நல்லையம் பெருமாள், தெய்வீகப்பேரவை நிர்வாகி குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருக்கல்யாணம்: உபயதாரர்கள் சார்பில் நேற்று முதல் மண்டகப்படி துவங்கியது. அன்னஞ்சிபிள்ளை ஆயி அம்மாள் தர்மசத்திரம் சார்பில் முதல்நாள் மண்டகப்படி நடந்தது. முக்கிய நிகழ்வான பூலாநந்தீஸ்வரர்–சிவகாமியம்மன் திருக்கல்யாணம் ஏப். 17 காலை 10:30 மணிக்கு நடக்கவுள்ளது. மறுநாள் மாலை 5:00 மணிக்கு தேர் வடம் பிடித்து, கண்ணாடி கடை முக்கில் நிலை நிறுத்தப்படும். ஏப். 19 மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் துவங்கி, தேர் முக்கில் நிலை நிறுத்தப்படும்.
சொற்பொழிவு: முதல் நாள் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சிவபுரம் ராமகிருஷ்ண ஆசிரம தலைவர் முக்தானந்த மகராஜ் தலைமை வகித்தார். ‘பஞ்சாட்சர மகிமை’ என்ற தலைப்பில், செந்தமிழ் இலக்கிய பேரவை தலைவர் நந்தகோபால் பேசினார். ஆசிரியர் முத்துக்குமார் ‘திருவாசகத்தேன்,’ என்ற தலைப்பிலும், யாழ்.ராகவன் திருஞானசம்பந்தரின் அருட்செயல்கள்’ குறித்து பேசினர். ஏற்பாடுகளை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் செய்திருந்தார்.