சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 31 ல் கொடியேற்றத்துடன் துவங்கி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. தினசரி காலை மற்றும் இரவில் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது இரு நாட்களுக்கு முன் நடந்த பொங்கல் விழாவில். ஏராளமான பக்தர்கள் கோயிலின் முன்பு பொங்கலிட்டனர். நேற்று முன்தினம் கயர்குத்து விழா நடைபெற்றது.
பக்தர்கள் அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அரிசிக் கொட்டகை மண்டபத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி வரைந்து கையில் வேப்பிலையுடன் வந்து வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து வழிபாடு செய்தனர்.இதை தொடர்ந்து நேற்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.