பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
01:04
ஈரோடு: செல்லாண்டியம்மன் கோவிலில், பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, நேதாஜி சாலை முனிசிபல் சத்திரம் பகுதியில் எழுந்தருளியுள்ள செல்லாண்டியம்மன் திருக்கோவில் குண்டம் பொங்கல் விழா கடந்த மார்ச், 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதை தொடர்ந்து கொடியேற்றம், காவிரி சென்று தீர்த்தம் எடுத்து வருதல், அலகு ஊர்வலம், அக்னி கபால ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக காரைவாய்க்காலில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில், கோவில் பூசாரி மற்றும் குண்டம் இறங்க காப்பு கட்டி விரதமிருந்து வந்த பக்தர்கள், கலந்து கொண்டு அம்மையை அழைத்து ஊர்வலமாக வந்து, கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கினர். முதலில் பூசாரி, அவரை தொடர்ந்து, கோவில் சாமியாடி பெண் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், சிலர் வேல் அலகு குத்தியபடி குண்டம் இறங்கினர். தொடர்ந்து பொங்கல் வைத்தல், மாலையில் மாவிளக்கு ஊர்வலம், இரவில், அரிவாள் மீது ஏறி அம்மன் அருள் வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடந்தது.
* அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவிலில், பங்குனி மாத குண்டம் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த, 21ல், துவங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள, 60 அடி குண்டத்தில் பக்தர்கள் நேற்று குண்டம் இறங்கினர். அந்தியூர், புதுப்பாளையம், தவிட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 1,000 க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர். இதையடுத்து தவிட்டுப்பாளையம் அழகு முத்துமாரியம்மன் கோவில் அருகே, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், பலவிதமான அலகுகள் குத்திக் கொண்டு ஊர்வலமாக வந்து, இறுதியில் கோவிலை வந்தடைந்தனர். 12ல், தேர்த் திருவிழா நடக்கிறது.