பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
12:04
சென்னை:இயற்கையை காப்பது தான், முருக வழிபாட்டின் நோக்கம், என, சுகி சிவம் பேசினார். சென்னை, வடபழனி முருகன் கோவிலில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், யாமிருக்க பயமேன் என்ற தலைப்பில், நேற்று சுகி சிவம் சொற்பொழிவாற்றி
பேசியதாவது: நம் நாட்டில், மேற்கு வங்கத்தில், காளி, மஹாராஷ்டிரத்தில் கணபதி, கேரளாவில் வைஷ்ணவம், கன்னடத்தில் சைவம் என, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு கடவுள்கள் சார்ந்து, வெவ்வேறு வழிபாடுகள் தோன்றி வளர்ந்தன.குறியீடுகள்தமிழகத்தில், முருக வழிபாடு தோன்றி வளர்ந்தது. மலையில் தான், முருகனுக்கு வழிபாடு நடந்தது.
இது, ஆதி தெய்வ வழிபாடாக இருந்தது.மலை, அருவி, ஆறு, கடம்ப மரம், நறுமணம் வீசும் பூக்கள், மயில் என, இயற்கை சார்ந்தவற்றை, முருக வழிபாட்டிற்கான குறியீடுகளாக அமைத்தனர். தற்போது, மலை, ஆறு, காடுகளை அழித்து முருகனையும் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் விளைவாக, தண்ணீர் பஞ்சம், வெயில் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இயற்கையை, நம்மால் வெல்ல முடியாது என்பதையும், தான் என்ற அகங்காரத்தை அகற்றி, எளியோருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனையை தோற்றுவிப்பதும் தான், வேதங்கள், உபநிஷத்துக்களின் நோக்கம்.அதற்காக தான், மதம், சமயங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மாற்று மதத்தினர், அவர்களின் வேதங்கள் சார்ந்த, வழிபாடுகள் சார்ந்த கருத்துகளை பரப்ப, ஒவ்வொரு நாளை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஹிந்து மதம் என்ற வார்த்தை, பிறகு தோன்றி இருந்தாலும், சனாதன தர்மம் என்ற, மிகப்பழமை யான அறம் சார்ந்த கருத்துகள் தோன்றி, மக்களை பண்படுத்தின. வியாபாரம்அவற்றை, நம் மதப்பெரியோர்கள், தொடர்ந்து எடுத்துச் செல்லாததால் தான், பக்தி என்பது வியாபாரமாகி விட்டது.பாமரர்கள் கூட, அறத்தை போற்றிய காலம் போய், பக்தியில் கூட, லாப, நஷ்டம் பார்ப்பதாகவும், கோவில்களை, லாபம் தரும், ஏஜென்சியாகவும் பார்க்கும் காலம் வந்துவிட்டது. வெயிலை நம்மால் நிறுத்த முடியாதது போல, பக்தியால், நம் கஷ்டங்களை போக்கிக் கொள்ள முடியாது என்பதை உணர வேண்டும்.வல்லமை வெயிலுக்கு கிடைக்கும் குடை போல, பக்தியால், கஷ்டங்களை வெல்லும் வல்லமையை பெற முடியும் என்பதை தான், நம் அறநுால்கள் கூறியுள்ளன.நம் சமயத்தில், ஆன்மாவுக்கு மரணம் என்பதே இல்லை.
அதை அறிந்தால், இருக்கும் பிறவியில், நல்லதை செய்து, பிறவியை கடந்தால், இல்லாத நிலையில் இருக்கும் நிலையை அடையலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், வடபழனி முருகன் கோவில் தக்கார், ஆதிமூலம் பேசுகையில், இனி, மாதம் தோறும், ஒரு சொற்பொழிவு நடத்தப்படும், என்றார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி பேசுகையில், இங்கு சொற்பொழிவு நிகழ்த்துவோர்,பல நுால்களை படித்து, இங்கு வெளிக்கொணர்வதால், இதை கேட்போரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், என்றார்.நிகழ்ச்சியில், வடபழனி முருகன் கோவில் செயல் அலுவலர், சித்ராதேவி, தினமலர் நாளிதழின் மதுரை பதிப்பு வெளியீட்டாளர், எல்.ராமசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.