பதிவு செய்த நாள்
14
ஏப்
2019
01:04
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார்.
விளம்பி ஆண்டில் இருந்து, ஸ்ரீவிகாரி ஆண்டு இன்று பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தரிசனம் நடைபெற்றது. பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், ஸ்ரீவிகாரி வருட புத்தாண்டை ஒட்டி, காலை, 6:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்படுகிறது.
அஷ்டலட்சுமி சன்னிதிகளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளன. நரசிம்மர், சக்கரத்தாழ்வாருக்கு பழ வகைகள், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீவிகாரி வருட பஞ்சாங்கம் வாசித்தல், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவு, 9:00 மணிக்கு, சயன பூஜை நடக்கிறது.கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வர், வடபழனி ஆண்டவர், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி, பாரிமுனை கற்பகாம்பாள், திருநீர்மலை ரங்கநாதர், குன்றத்துார் முருகன், மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்காரம், தேர் பவனி, பஞ்சாங்கம் வாசிப்பது ஆகியவற்றுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.