பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே, வெயிலின் தாக்கம் குறையவும், மழை பெய்யவும் வேண்டி, கிராம மக்கள் கூழ், கஞ்சி, மோர் தானம் வழங்கி, சிறப்பு வழிபாடு செய்தனர்.பருவ மழை போதிய அளவில் பெய்யாததால், கள்ளக்குறிச்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு, விவசாயப் பணிகள் முடங்கிய நிலையில், கால் நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அடுத்த பிரிதிவிமங்கலம் கிராம மக்கள், ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தினர் இணைந்து, வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். கிராம நுழைவாயிலில் பொங்கலிட்டு, படையலிட்டனர்.பின்னர், பொது மக்களுக்கும், சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், கூழ், கஞ்சி, மோர் தானம் வழங்கினர்.