பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
கடலூர்: கடலூரில், கிறிஸ்தவர்கள் பங்கேற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப் படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு உள்ள நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது.
தவக்காலம் கடந்த மார்ச் 6ம் தேதி துவங்கியது. தவக் காலத்தில் நேற்று (ஏப்., 14ல்), குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி, கடலூரில் உள்ள புனித கார்மேல் அன்னை ஆலயம், கம்மியன் பேட்டை புனித சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.சிதம்பரம் சிதம்பரத்தில் நேற்று காலை, சிதம்பரம் காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்ட குருத்தோலை பவனிக்கு, பங்குதந்தை சூசை அடிகளார் தலைமை தாங்கினார்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற பவனியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். குருத்தோலை பவனி, கனக சபை நகரிலுள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் முடிவடை ந்தது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை, பங்கு பேரவையினர், வின்சென்ட் தேவபவுல் சபை, மரியாயின் சேனையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.