பதிவு செய்த நாள்
16
ஏப்
2019
12:04
அலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று துவங்கியது. நாளை (ஏப்., 17) மாலை மதுரை வைகையாற்றில் இறங்க கள்ளழகர் வேடத்தில் அழகர் புறப்படுகிறார்.
கள்ளழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை வாகனம் நேற்று மதுரை புறப்பட்டது. சித்திரை திருவிழாவையொட்டி நேற்று மாலை மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று (ஏப்., 16) மாலை சுவாமி புறப்பாடு நடக்கிறது. நாளை மாலையில் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடத்தில் பெருமாள் மதுரை புறப்பட்டு செல்கிறார். நேற்று அழகர்கோவிலில் இருந்து தங்கக்குதிரை, சேஷ மற்றும் கருட வாகனங்கள் தனித்தனியாக லாரிகளில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வைகையாற்றில் இறங்கும் கள்ளழகருக்காக தங்கக்குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோயில், கருட வாகனம் தேனுார் மண்டபம், சேஷவாகனம் வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலுக்கும் செல்கின்றன.
பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக 27 உண்டியல்கள் பெருமாளுடன் மதுரை செல்லவுள்ளன. வழிநெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள 445 மண்டகபடிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். ஏப்., 18 காலை 6:00 மணிக்கு மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. ஏப்., 19 அதிகாலை 5:45 முதல் காலை 6:15 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருள்வார். ஏப்., 20 சேஷவாகனத்தில் வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருள்வார். தேனுார் மண்டபத்தில் கருடவாகனத்தில் பிரசன்னமாகி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபம் நீக்கி மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 21 இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் சுவாமி பூப்பல்லக்கில் காட்சியளிப்பார். ஏப்., 22 அங்கிருந்து புறப்பாடாகி இரவு அப்பன் திருப்பதியில் எழுந்தருள்வார். ஏப்., 23 காலை அழகர்கோவிலுக்கு கள்ளழகர் திரும்புவார். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.