பதிவு செய்த நாள்
16
ஏப்
2019
11:04
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டு முதல், தமிழில் அர்ச்சனை துவக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38,646 கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் உள்ளன. இதில், 3,500க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. அக்கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்ய, அறநிலையத் துறை உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் மற்றும் முருகன் கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான கோவில்களில், இன்னும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முதல், வடபழனி ஆண்டவர் கோவிலில், தமிழில் அர்ச்சனை துவக்கப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் கோவில் நடை திறந்ததும் காலை, 6:30 மணிக்கு நடக்கும் கால சந்தி பூஜை, தமிழில் செய்யப்படும் என, கோவில் தக்கார், எல்.ஆதிமூலம், செயல் அலுவலர், சித்ராதேவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.