பதிவு செய்த நாள்
16
ஏப்
2019
03:04
உடுமலை:உடுமலை, மாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கம்பம் நடுதல் இன்று (ஏப்., 16ல்)நடக்கிறது.உடுமலை, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 9ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. அன்று மாலை, சிறப்பு பூஜைகளுடன் நோன்பு சாட்டப்பட்டது.
தொடர்ந்து, கோவில், திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள், நிழல் பந்தல் அமைப்பது மற்றும் பக்தர்களுக்கான வரிசை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கம்பம்
நடுதல் நிகழ்வுக்கு பின்னர், திருவிழாவில், சிறப்பு பூஜை, பூவோடு, மாவிளக்கு மற்றும் அம்மன் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கம்பம்
நடுதல் நிகழ்ச்சி இன்று (ஏப்., 16ல்) நடக்கிறது.
மானுப்பட்டி கிராமத்திலிருந்து, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலுக்கு கம்பம் எடுத்து வரப்படுகிறது.மாரியம்மன் கோவிலில், இன்று (ஏப்., 16ல்)மாலை, 6:30 மணிக்கு ஹோமம் நடத்திய பின்னர், கம்பம் எடுத்துவர புறப்பாடு நடக்கிறது.
சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில், இரவு 7:00 மணிக்கு, கம்பம் சிறப்பு அலங்காரப்பணிகள் நடக்கிறது.மலர் அலங்காரத்துடன், இரவு, 8:00 மணிக்கு, தளி ரோடு வழியாக கம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மாரியம்மன் கோவிலில், 8:30 மணிக்கு நடப்படுகிறது. பக்தர்கள் இன்று (ஏப்., 16ல்) இரவு முதல், மஞ்சள் தீர்த்தம் ஊற்றி வழிபடலாம்.அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடக்கிறது. நாளை (ஏப்., 17ல்)மாலையில், கோவில் வளாகத்தில், பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.வரும் 18ம் தேதி இரவு 12:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,19 ம்தேதி கொடியேற்றம் துவங்கியதும், 26ம்தேதி வரை, சிறப்பு
அலங்காரத்துடன் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.