பதிவு செய்த நாள்
17
ஏப்
2019
11:04
உடுமலை : உடுமலை, மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவின் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை, மாரியம்மன் கோவில் திருவிழா, நோன்பு சாட்டுதலுடன் கடந்த 9ம் தேதி துவங்கியது.
திருவிழாவின், முக்கிய நிகழ்வான கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.மானுப்பட்டி பகுதில், திருக்கம்பம் தயார் செய்து, பஸ் ஸ்டாண்ட் சுந்தர மூர்த்தி விநாயகர் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. கம்பத்துக்கு மஞ்சள் பூசி, சிறப்பு பூஜைகளுடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வான வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் சூழ, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலிலிருந்து திருக்கம்பம் ஊர்வலமாக, மாரியம்மன் கோவில் வந்தடைந்தது. பக்தர்களின் ஓம் சக்தி கோஷம் முழங்க, கோவிலில் திருக்கம்பம் நடப்பட்டது.இன்று முதல், அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது. நாளை, இரவு, 12:00 மணிக்கு வாஸ்து சாந்தி மற்றும் கிராம சாந்தி பூஜைகள் நடக்கிறது. வரும் 19ம்தேதி, மதியம், 12:30 மணிக்கு கொடியேற்றப்படுகிறது.தொடர்ந்து, மதியம், 2:00 மணி முதல் பூவோடு ஆரம்பமாகிறது.
மாலையில், அம்பாள், புஷ்ப அலங்காரத்துடன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.தொடர்ந்து, 26ம்தேதி வரை, நாள்தோறும், மாலை, 7:00 மணிக்கு, யானை, ரிஷபம், அன்னம், சிம்மம், மயில், மற்றும் இறுதியாக குதிரை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.வரும் 24ம்தேதி, அதிகாலையில், மாவிளக்கு பூஜை, மாலையில் அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 25ம்தேததி, காலை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மாலை, 4:15 மணிக்கு திருத்தேர், புறப்படுகிறது. பரிவேட்டை, 26ம்தேதி இரவு, 8:00 மணிக்கு நடக்கிறது.