பதிவு செய்த நாள்
06
மார்
2012
04:03
தற்காலத்திலும், எதிர்காலத்திலும் தனக்கும், பிறருக்கும் துன்பம் ஏற்படாத வகையில் அளவோடு உலகை அனுபவிக்கும் வாழ்க்கை வாழ வேண்டும்.
மனிதனை மனிதன் நேசிப்பதுடன் மதித்தும் நடக்க வேண்டும். முடிந்தவரை ஒருவரை ஒருவர் எப்போதும் வாழ்க, வாழ்க என்று வாழ்த்திக் கொண்டே இருந்தால் நேசம் வளரு வதுடன், வெறுப்பு நீங்கி நன்மை ஏற்படும்.
வருமானம் கிடைக்கும் போது சேமித்து வைக்கும் பணம் தேவையான போது உதவுவதைப் போல், சாந்தமாக இருக்கும் போது ஏற்படும் மனஉறுதி, கோபம் வரும் போது வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்க முன்வந்து நிற்கும்.
அறிஞர்கள், அனுபவசாலிகளின் கருத்துக்களும், சரித்திரங்களும் அவற்றை படிக்கும் அனைவருக்கும் பலவிதத்திலும் நற்பயனை அளிக்கின்றன.
குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்பது இந்த விஞ்ஞான காலத்தில் அவசியமில்லை, மாறாக, அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற கல்வியை கற்பித்து வைத்தால் அதுவே அழிக்க முடியாத பெரும் சொத்தாகும்.
கோபம், நம்பவைத்து ஏமாற்றுவது, பொறாமை, வெறுப்புணர்ச்சி, பேராசை, ஒழுக்கம் மீறிய காமநோக்கம், தற்பெருமை, அவமதிப்பு, அவசியமற்ற பயம், அதிகார போதை ஆகியவை நமது உள்ளத்தில் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காலையிலும், மாலையிலும் பத்து நிமிடம் அமைதியாக உட்கார்ந்து அவரவர் உள்ளத்தை, அவரவரே சோதனையிடும் பணியைத் துவக்கினால், 30 நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழலாம்.
உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்கள், நாளுக்கு நாள் உறுதி பெற்று வாழ்விற்கு பயனைத் தருகிறது. நமது வாழ்வு நலம் பெற எந்தவிதமான கெட்ட
எண்ணத்தையும் உள்ளத்தில் ஊன்றவோ, வளரவிடவோ கூடாது.
கோபத்தை தவிர்க்கப் பழகுவதால் குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யுமிடத்தில் உள்ளவர்கள், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு பெருகுவதுடன், இனிமையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
விழிப்போடு சிந்தித்து செயல்படும் செயல்களினால் முன்வினையில் செய்த தீமை கூட தடுக்கப்படும், எதிர்காலமும் இனிமையாக இருக்கும் என்பது தத்துவ நியதி. இதை உணர்ந்து மதிப்பளித்துச் செயல்புரிந்தால் நலமுடன் வாழலாம்.
ஜனநாயகம் என்ற போர்வையில், அரசியல்வாதிகள் என்ற முத்திரையில் சுயநலமிகள் குழுவாக இணைந்து ஆட்சியை மாறிமாறிக் கைப்பற்றி, மக்களை காயாடும் சூதாட்டம் ஆடுகின்றனர். ஆட்சி போதை என்ற வெள்ளம் அவர்களை அடித்துச் செல்கிறது. ஓட்டுரிமை என்ற கருவியைச் சரியாகப் பயன்படுத்தி ஆட்சி போதை கொண்ட அரசியல்வாதிகளையும், ஆபத்தில் சிக்கிய மக்களையும் மீட்க வேண்டும்.
அன்பு தான் நமது வாழ்வின் ஊற்று, சிறிது வெறுப்பு ஏற்பட்டாலும் நமது உள்ளத்தின் இனிமை கெட்டுவிடும்.
தேவையற்ற பொருட்களையும், செயல்களையும் விட்டு ஒழிப்பதுடன், தேவையற்ற பொருட்கள் எவை என்று அறிந்து, அவற்றின்உற்பத்தியை நிறுத்திவிட்டால், உலகில் துன்பம் செயற்கையால் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கும்.
-வேதாத்ரி மகரிஷி