பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
01:04
மயிலம்: திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, 1,008 பால் குடங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்துவந்து அபிஷேகம் செய்தனர்.மயிலம் அடுத்த திருவக்கரை வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.காலை 9:00 மணிக்கு சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் 1,008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், மேலாளர் ரவி, குருக்கள் சேகர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.