பதிவு செய்த நாள்
26
ஏப்
2019
01:04
வேடசந்தூர்: நாட்டில் நல்லெண்ணம் மற்றும் நன்னெறியை பரப்பும் விதமாக ஜைன மதத்துறவியர் குழு கன்னியாகுமரியில் இருந்து திண்டுக்கல் வேடசந்தூர் வழியாக டில்லிக்கு அஹிம்சை நடைபயணம் மேற்கொண்டது.
உலகில் மனிதத்தன்மை அழிவை நோக்கி அடியெடுத்து வைத்து செல்கிறது. நன்னெறி மதிப்பீடுகள் தனது அடையாளத்தை இழந்து கொண்டு வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் தான் யாராவது ஒரு மாமனிதர் தனது தெய்வீக கடமை மற்றும் தூய முயற்சிகள் மூலமாக மனித குலத்தில் ஒரு அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற நல்நோக்கில்,பகவான் மஹாவீரரின் வழிவந்த ஜைன ஸ்வேதாம்பர் தேராபந்த அறச்சங்க த்தின் பதினோராவது தலைமை அடிகளார் ஆசார்யர் மஹாஸ்ரமண் தலைமையில் 80 துறவிகள் இதில் பங்கேற்றனர். 2014-ல் டில்லியில் நடைபயணத்தை துவக்கி பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் நடைபயணம் மேற்கொண்டனர்.
நவ.9 ல் டில்லியில் துவங்கிய நடைபயணம் சென்னை, கோவை, திருநெல்வேலி, கன்னியா குமரியில் முடித்தனர். பின்னர் அங்கு துவங்கிய நடைபயணம் மதுரை, திண்டுக்கல், வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக டில்லி சென்றது.
இத்துறவியர் குழுவினர் மக்களிடையே நல்லெண்ணம், நன்னெறியை பரப்புதல், போதை ஒழிப்பு பிரசாரத்தை முன்னெடுத்தல் என செயல்படுகின்றனர். இவர்கள் மாலையில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் முதல் மறுநாள் சூரியன் தோன்றும் நேரம் வரை உணவோ, நீரோ அருந்துவதில்லை. தாங்கள் பேசும்போது காற்றில் உள்ள நுண்ணுயிர்களும் இறந்துவிடக் கூடாது என்பதற்காக, எந்நேரமும் வாயை துணியால் கட்டிக்கொண்டுள்ளனர்.