விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் சுவாமிக்கு, திருப்பதி தம்பதியினர் வெள்ளி வேல் காணிக்கையாக செலுத்தினர்.
விருத்தாசலம் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், பிராதுகட்டி வேண்டுவது ஐதீகம். பக்தர்களின் பிராது கட்டிய 3 நாட்கள் அல்லது 3 வாரம் அல்லது 3 மாதங்களில் வேண்டுதல் நிறைவேறியதும், பிராது வாபஸ் பெறுவது வழக்கம். அதன்படி, ஆந்திரா மாநிலம் திருப்பதியை சேர்ந்த நகை கடை உரிமையாளரான ஹரிபாபு – பிரபாவதி தம்பதியினர், கடந்தாண்டு இந்த கோவிலுக்கு வந்து பிராதுகட்டி வேண்டினர். வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து, ரூ.50 ஆயிரம் மதிப்பில், 1 கிலோ 22 கிராம் எடையுடைய வெள்ளி வேலை நேற்று காணிக்கையாக செலுத்தி, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இதற்காக, நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த அவர்கள், கோவில் சிவாச்சாரியார்கள், ஊழியர்கள் முன்னிலையில் வெள்ளி வேலை வழங்கிச் சென்றனர்.