பதிவு செய்த நாள்
02
மே
2019
03:05
சிவகங்கை:சிவகங்கை அருகே திருமலை மலைக்கொழுந் தீஸ்வரர் கோயில் மலையில் உள்ள சமணர் படுகை, தமிழ் பிராமி எழுத்துக்கள், குடவரை கோயிலை காக்க, தொல்லியல் துறை கட்டுப்பாடு விதித்து, விழிப்புணர்வு போர்டுகளை வைத்துள்ளது.
சிவகங்கை அருகேயுள்ள திருமலை பகுதியை 11ம் நூற்றாண்டில் சோழ மன்னர் முதலாம் ராஜேந்திரன் பாண்டியர்களிடமிருந்து கைப்பற்றினார். 12ம் நூற்றாண்டில் பாண்டிய வம்சத்தில் இருந்து வந்த ஜடாவர்ம குலசேகரன் சோழமன்னனை வென்றார்.
சிவ பக்தரான ஜடாவர்ம குலசேகரன் வெற்றிக்கு காணிக்கையாக திருமலையில் மலைக் கொழுந்தீஸ்வரர் கோயிலை கட்டினார். கி.பி., 2ம் நூற்றாண்டில் இருந்த தமிழ் பிராமி கல்வெட்டு, குன்றுகளில் பழந்தமிழர்களின் வரலாறு சொல்லும் ஓவியங்கள் இன்றைக்கும் கண்கொள்ளா காட்சியாக உள்ளன.
ஒரே மலையில் பழந்தமிழர் பெருமை: இங்குள்ள சமணர்படுகை, தமிழ் பிராமி எழுத்து, குடவரை கோயிலை பாதுகாக்கப்பட்ட சின்னமாக தொல்லியல் துறை அறிவித்து பாதுகாக்கிறது. மாநிலத்தில் 50 இடங்களில் உள்ள குகை ஓவியங்களில் இங்குள்ள குகை ஓவியமும் பிரசித்தி பெற்றது.
கி.பி., 3 முதல் 4ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சமண துறவிகள், மதத்தை பரப்புவதற்காக இங்கு வந்த போது மலை மீது, சமணர் படுகை அமைத்து தங்கிய வரலாறு உண்டு. ஒரே மலை மீது சமணர் படுகை, தமிழ் பிராமி எழுத்துக்கள், குடவரை கோவில் உள்ள தலம் மாநிலத்திலேயே திருமலை மட்டுமே. அரசு இப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து 84 லட்ச ரூபாயில் தார்ரோடு, மலைமீது கிரிவலப்பாதை, படிக்கட்டு, இரும்பு கைப்பிடி, குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளது.
சேதமாகும் சமணர் படுகை: இச்சிறப்பு பெற்ற மலைமீதுள்ள சமணர் படுகையில் பெயின்ட் அடித்தும், கல்வெட்டுக்களை சேதப்படுத்தியும் வருகின்றனர். மது பிரியர்கள் இங்கு வந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர்.
இம்மலையின் சிறப்பை பாதுகாக்க கிராமத்தினர், தொல்லியல் மற்றும் சுற்றுலாத்துறையினர் பாடுபட்டு வரும் நிலையில், இது போன்று சிலரது செயல்பாடு வரலாற்று ஆர்வலர்களை முகம் சுளிக்க செய்கிறது.
பண்டைய கலாசார, மரபின் மதிப்பை ரசிக்க மட்டுமே சுற்றுலா பயணிகள் முன்வரவேண்டும். எனவே புனிதமான சமணர்படுகை, தமிழ் பிராமி எழுத்து உட்பட பாரம்பரிய, புராதன சின்னத்தை பாதுகாத்து தமிழர்களின் வரலாற்றை பேணிக்காக்க சுற்றுலா பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்.
சேதப்படுத்தினால் அபராதம்: தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருமலை மலைமீதுள்ள பாரம்பரிய சின்னத்தின் எல்லையில் இருந்த 100 மீட்டர் வரை தடை செய்யப்பட்ட பகுதி, அதிலிருந்து மேலும் 200 மீட்டர் தூரமும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு பகுதியாக அறிவித்துள்ளோம்.
பாரம்பரிய சின்னத்தை சுத்தமாக, நற்சூழலில் பராமரிக்க சுற்றுலா பயணிகள் ஒத்துழைக்க வேண்டும். இந்த இடம் வளமையான கலாசார மற்றும் மரபின் மதிப்பினை ரசிக்க மட்டும் தான்.
இதை விடுத்து பாரம்பரிய சின்னத்தில் கிறுக்கவோ, பிளாஸ்டிக், பாலிதீன் குப்பையை போடுவதோ, தொல்பொருட்களின் இயல்பு தன்மைக்கு ஊறுவிளைப்பது குற்றமாகும்.
இதையும் மீறி சின்னங்களை சேதப்படுத்தினால் 3 மாத சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு போர்டும் தொல்லியல் துறை சார்பில் புதிதாக வைத்துள்ளோம், என்றார்.