பதிவு செய்த நாள்
03
மே
2019
12:05
சென்னை: திருச்செந்துார் முருகன் கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, மயில் சிலையை சேதப்படுத்தி, அபகரிக்க முயற்சி நடந்தது தொடர்பாக, திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர். துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான, சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின், மூலவர் சிலைக்கு எதிரே, மகா மண்டபம் உள்ளது. இதில், 2000 ஆண்டுகள் பழமையான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, கற்களால் செய்யப்பட்ட, நந்தி மற்றும் இரண்டு மயில் சிலைகள் உள்ளன.இவற்றில், ஒரு மயில் சிலையின் தலை துண்டிக்கப்பட்டு இருப்பது, பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, நரசிம்ம ரங்கராஜன் என்பவர், ஹிந்து அறநிலையத் துறை கமிஷனரிடம், இ - மெயில் வாயிலாக புகார் அளித்துள்ளார்.இதையடுத்து, திருமேனி காவல் பணியாளர்கள் நான்கு பேர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மயில் சிலையை அபகரிக்க முயற்சி நடந்து இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்க வேலுக்கு தெரிய வந்தது. அவரது தலைமையில், முதல்கட்ட விசாரணை நடந்தது. அப்போது, ஹிந்து அறநிலையத் துறை இணை கமிஷனர் பரஞ்ஜோதி, திருமேனி காவல் பணியாளர்கள் சாமிநாதன், சுரஷே், ராஜகுமார் ஆகியோர், மயில் சிலையை அபகரிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது.நால்வர் மீதும், திருச்செந்துார் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
இது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:அறநிலையத் துறை இணை கமிஷனராக பணியாற்றி வரும், பரஞ்ஜோதி, 2017ல், திருச்செந்துார் முருகன் கோவில், பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.அந்த ஆண்டு, ஆக., 8ல், பரஞ்ஜோதி துணையுடன், சுரஷே், சாமிநாதன், ராஜகுமார் ஆகியோர், மயில் சிலையை அகற்றி உள்ளனர். இதுபற்றி, அரசுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. மாறாக, புதிய மயில் சிலையை செய்து, அந்த இடத்தில் வைத்துள்ளனர்.இந்த தகவல் வெளியே கசிய துவங்கியது. இதனால், பரஞ்ஜோதி உள்ளிட்ட நால்வரும், பழைய மயில் சிலையை, இரவோடு இரவாக, மீண்டும் அந்த இடத்தில் வைத்துள்ளனர். ஆனால், அதன் தலைப் பகுதியை துணியால் மூடி வைத்துள்ளனர் .
இந்த தகவல், அப்போதைய அறநிலையத்துறை கமிஷனருக்கு தெரிய வந்ததும், விசாரித்து அறிக்கை தருமாறு, கூடுதல் கமிஷனர் திருமகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு, தவறு நடந்து இருப்பதாக, அறிக்கை அளித்துள்ளார். ஆனால், மயில் சிலையை, அரசுக்கு தெரியாமல் அகற்றியது, சட்டப்படி குற்றம். இது தொடர்பாக, போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும்.குளிர்சாதன பெட்டி பொருத்தும் போது, இரும்பு கம்பி கீழே விழுந்து, மயில் சிலையின் தலை சேதமடைந்து விட்டது என, பரஞ்ஜோதி உள்ளிட்ட நால்வரும் தெரிவிக்கின்றனர்.அவர்கள், மயில் சிலைக்காக, கடத்தல்காரன்களிடம் பேரம் பேசிய தகவல் கிடைத்துள்ளது; அதுபற்றி விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.