பதிவு செய்த நாள்
04
மே
2019
01:05
சிவகாசி: தெய்வ நம்பிக்கையோடு கோயிலுக்கு சென்று சுவாமி கும்பிடுபவர்கள் ஏராளம். சுவாமி கும்பிடுபவர்கள் எந்த தெய்வமாக இருந்தாலும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
ஆடு, கோழி வெட்டுதல், முடி காணிக்கை செலுத்துதல் என இஷ்ட தெய்வங்களுக்கு பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவர். நாம் நினைத்தது நடந்ததற்கும், நடப்பதற்கும் இவ்வாறு வேண்டிக் கொள்வர்.
திருமண தடை, குழந்தையின்மை போன்றவற்றிற்கு உருவ பொம்மையை கோயிலில் செலுத்தி வேண்டி கொள்வர். திருமண தடை என்றால் ஆண், பெண் ஜோடி பொம்மை, குழந்தையின்மைக்கு குழந்தை பொம்மை, கை, கால் வலி சரியாவதற்கு அதற்குரிய உருவ
பொம்மையை வாங்கி நேர்த்திக் கடன் செலுத்துவர்.
கால்நடை செல்வங்கள் பெருகுவதற்காக ஆடு, மாடு உருவ பொம்மையும் உண்டு. இதுபோன்ற நேர்த்திக்கடன் பெரும்பாலும் அம்மன் கோயில்களில்தான் நடைபெறும்.
சிவகாசி தேரடி வீதியில் பங்குனி, சித்திரை மாத பொங்கலை முன்னிட்டு நேர்த்திக்கடன் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. உருவ அளவினை பொறுத்து ரூ. 70 லிருந்து 150 வரை உள்ளது.
இத்தொழில் ஈடுபடும் சித்துராஜபுரம் சொர்ணபுஷ்பம், இத்தொழிலில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். பங்குனி, சித்திரை என இரு மாதங்கள் மட்டுமே இத்தொழில் நடைபெறும்.அம்மன் கோயில்களில் நேர்ந்து கொண்டு இது போன்ற உருவ பொம்மைகளை வாங்கி நேர்த்திக் கடன் செலுத்துவர். விருதுநகர் மயித்தான்பட்டியில் இந்த உருவ பொம்மைகளை வாங்கி விற்பனை செய்கிறோம், என்றார்.