பதிவு செய்த நாள்
04
மே
2019
02:05
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பாதுகாப்பு குறித்து, சிறப்பு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கை தலைநகர் கொழும்பு தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களில், பிரசித்தி பெற்றவை என கணக்கிட்டால், 50 கோவில்களுக்கு மேலாக இருக்கும். இக்கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. நேற்று (மே., 3ல்), நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் கோவில்களில், சென்னை போலீஸ் தலைமையிடத்தில் இருந்து, பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக நடந்த, ஆலோசனை கூட்டத்தில் கோவில் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், கண்காணிப்பு கேமரா, பக்தர்கள் எளிதாக வந்து செல்ல வழி, ஒரே இடத்தில் கும்பலாக நிற்க வைக்காமல் உடனுக்குடன் அனுப்புவது, சந்தேகத்துக்குரிய நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சிறப்பு போலீசார் அறிவுறுத்தினர்.