பதிவு செய்த நாள்
05
மே
2019
04:05
விருத்தாசலம்:இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால் பக்தர்கள் சிரமமடைகின்றனர்.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில், புகழ்பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகின்றனர். கிருத்திகை, சஷ்டி, பங்குனி உத்திரம் போன்றவை சிறப்பாக நடக்கிறது.அப்போது, கொளஞ்சியப்பர் உற்சவ மூர்த்தி வெள்ளித்தேரில் உட்பிரகார வலம் வருவது வழக்கம். இதற்காக, பக்தர்கள் கட்டணம் செலுத்தி, வெள்ளித்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.இந்த கோவிலில், கொளஞ்சியப்பர் சுவாமியிடம் பிராது சீட்டு வைத்து, முனியப்பர் சன்னதியில் அதனை கட்டி, வேண்டிக் கொள்வர். அதன்படி, 3 நாட்கள் அல்லது 3 வாரம் அல்லது 3 மாதத்திற்குள் பிராது கட்டிய பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்து சமய அறநிலையத்துறையின் வெப்சைட்டில், கொளஞ்சியப்பர் கோவிலின் சிறப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும், மும்பை, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இதன் மூலம் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மட்டுமல்லாது பிராது சீட்டு, திருமணம், காதணி மற்றும் வேண்டுதலுக்கு விடப்படும் மாடு, ஆடு, கோழிகளை ஏலம் விடுவது போன்றவற்றின் மூலம் அதிகளவு வருவாய் கிடைக்கிறது.மேலும், கோவில் வளாகத்தில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட இதர இனங்கள் மூலம் அதிகளவு வருவாய் கிடைக்கிறது.இந்நிலையில், கோவிலுக்கு வந்து தங்கி, தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தராதது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பான குடிநீர் வசதி, குளியலறை, கழிவறை, தங்குமிடம் எதுவும் இல்லாமல், வெளிநாடு மற்றும் பிற மாநில பக்தர்கள் அவதி அடைகின்றனர். அவர்கள் தனியார் லாட்ஜ்களில் தங்க வேண்டிய அவலம் உள்ளது.
இது குறித்து பக்தர்கள் சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாதந்தோறும் பல லட்சங்களை ஈட்டித்தரும், கொளஞ்சியப்பர் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்களை அலைக்கழிப்பது வேடிக்கையாக உள்ளது. எனவே, கொளஞ்சியப்பர் கோவிலில் பக்தர்கள் நலன் கருதி பாதுகாப்பான குடிநீர் வசதி, குளியலறை, கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கோவில் வளாகத்தில் பாழாகி வரும் தங்குமிடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.